நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
மோசடி வழக்கில் தொழிலதிபரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
பிட்காயின் வடிவில் மாதம் 10 சதவீத வருமானம் என தவறான வாக்குறுதி அளித்து கடந்த 2017ம் ஆண்டில் ரூ. 6,600 கோடி நிதியை மக்களிடம் வசூலித்து மோசடி சம்பவம் நடந்தது. இந்த விவகாரத்தில், மறைந்த அமித் பரத்வாஜ், அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் பலர் மீது மகாராஷ்டிரா, டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தை விசாரிக்க துவங்கியது.
இந்த மோசடியின் மூளை என கருதப்படும் மறைந்த அமித் பரத்வாஜிடமிருந்து, தொழிலதிபர் ராஜ் குந்த்ரா 285 பிட்காயின்களை (ரூ.150 கோடிக்கும் மேல் மதிப்புடையது) பெற்றதாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் சிம்பி பரத்வாஜ், நிதின் கவுர், நிகில் மகாஜன் ஆகிய மூன்று பேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். மேலும், இந்த வழக்கில் ரூ.69 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. இந்நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ. 97.79 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை தற்போது முடக்கியுள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஒரு பங்களா, ராஜ் குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள், ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜூஹுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை உள்ளிட்ட சொத்துகள் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002 விதிகளின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.