பாராளுமன்றம் செயல்படாத நாட்டில் ஜனநாயகம் இருக்காது - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன
ஜனநாயகத்தின் இதயம் பாராளுமன்றம் எனவும் பாராளுமன்றம் செயற்படாத நாடு கட்டுப்பாட்டின்றி வழிதவறிச் செல்லும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.சட்டவாக்கம் இன்றி நீதித்துறை அல்லது நிறைவேற்று அதிகாரம் இயங்க முடியாது எனவும், இந்த மூன்று தூண்களும் இணைந்தால் நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க முடியும் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.கடவத்த மஹாமாயா மகளிர் கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டார்.கடவட மஹாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண கூட்டம் திங்கட்கிழமை (19) பழைய பாராளுமன்றமான தற்போதைய ஜனாதிபதி அலுவலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர் பாராளுமன்ற மாணவர்களுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வாழ்த்து தெரிவித்ததோடு பாராளுமன்ற வரலாறு குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர் பாராளுமன்ற நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்னாயக்க சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவிக்கையில்,இந்த மாணவிகள் இன்று பழைய பாராளுமன்றத்தில் கூடியுள்ளனர். இந்த பாராளுமன்றத்தில் இருந்தே நாட்டுக்கு தேவையான சட்டவிதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தயாரிக்க அன்றைய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர். பேச்சு சுதந்திரத்தை புரிந்து கொள்ளும் இடம் பாராளுமன்றம் மட்டுமே. அங்கிருக்கும் சிறப்புரிமைகளின் நல்ல விடயங்களைப் போலவே தவறான விடயங்களைப் பற்றியும் பேசுகிறார்கள்.பாராளுமன்றத்தில் ஜனநாயகம் சிறப்பாகவே இருக்கிறது. பாராளுமன்ற செயற்பாட்டைப் பார்க்கும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் எம்.பி.க்கள் என்னைக் குற்றம் சாட்டுவதை நீங்கள் காணலாம். அந்த வகையில் பாராளுமன்றம் ஜனநாயகத்தின் இதயம். பாராளுமன்றம் செயல்படவில்லை என்றால் நாட்டில் ஆட்சி இல்லை. எனவே, அனைத்தும் பாராளுமன்றத்தின் செயல்பாட்டின் மூலம் செயல்படுகின்றன.சட்டவாக்கம் இல்லாமல் நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம் என்பவற்றுக்கு தனித்து இயங்க முடியாது. எனவே, ஒரு நாட்டின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதில் நீதித்துறை, நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் ஆகியன சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் மூன்று சுயாதீன நிறுவனங்களாக உள்ளன. மக்களின் வாக்குகளின் மூலம் தான் சட்டவாக்கத்திற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த தெரிவுகள் அனைத்தும் ஜனநாயக ரீதியில் நடைபெறுகின்றன. உலகத்தைப் பார்க்கும் போது, ஜனநாயகம் இல்லாத ஒரு நாட்டின் கொடூரமான போக்கைக் காணலாம். ஜனநாயகம் இல்லையென்றால், நாளாந்தம் கொலைகள் நடக்கும் எந்தத் துறையினதும் கட்டுப்பாட்டின்றி இயங்காத நாடும் உருவாகும்.அப்போது மக்கள் அந்த நாட்டில் இருக்க விரும்ப மாட்டார்கள். அந்த மக்கள் வேறு நாட்டிற்குச் சென்று அகதிகளாக வாழ முடிவு செய்வர். எனவே, மக்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்காக பாடுபடுவது தொடர்பான சட்டங்களை இயற்றும் திறன் பாராளுமன்றத்திற்கு உள்ளது. இன்று இங்குள்ள பிள்ளைகளில் ஒருவர் எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராகி நாட்டின் சட்டங்களை உருவாக்கும் பொறுப்பை ஏற்க வாழ்த்துகிறேன்.தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலக உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக்க தங்கொல்ல, இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற பணிக்குழாம் பிரதானி சமிந்த குலரத்ன மற்றும் கடவத்த மஹாமாயா மகளிர் கல்லூரி ஆசிரியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.