சீரற்ற காலநிலை - ஒத்திவைக்கப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு கடந்த நவம்பர் 27 ஆம் திகதிமுதல் 6 நாட்களுக்குக் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில் இன்றுமுதல் மீண்டும் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் ஏலவே விநியோகிக்கப்பட்ட பரீட்சை கால அட்டவணைக்கு ஏற்ப இன்றையதினம் பரீட்சை நடத்தப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட அவர், ஒத்திவைக்கப்பட்ட 6 நாட்களுக்கான பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமையும், நவம்பர் 28ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமையும் இடம்பெறும்.
அதேநேரம் கடந்த 29ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், நவம்பர் 30 ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமையும் நடைபெறும்.
அத்துடன், டிசம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 30 ஆம் திகதி திங்கட்கிழமையும், நேற்றையதினம் இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 31 ஆம் திகதி செவ்வாய் கிழமையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தொடர்ந்து சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள் தங்களுக்கு அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
000