வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தம்
முதுகலை படிப்பு மற்றும் பயிற்சிக்காக வெளிநாடு செல்லும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு விமான டிக்கெட் மற்றும் இதர வசதிகளுக்கு பணம் வழங்குவதை நிதி அமைச்சு நிறுத்தியுள்ளது. இதனை நிதியமைச்சு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழு வருடங்கள் தொடர்ச்சியாகப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முதுகலைப் படிப்பு அல்லது பயிற்சி நடவடிக்கைகளுக்காக ஓராண்டு விடுமுறை வழங்கப்படும் எனவும், வெளிநாடு செல்லும் ஆசிரியர்களுக்கு விமான பயண சீட்டு உள்ளிட்ட போன்ற வசதிகள் வழங்கப்படும் எனவும் அவர்களது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் அந்த வசதிகளை வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என்றும் இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் நிதியமைச்சு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடியிருந்தால் அது சாதகமான நிலையை எட்டியிருக்கும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.