நாடு முழுவதும் மின் தடை - மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பாகிஸ்தான் பிரதமர்
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. உணவு, எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, பாகிஸ்தான் முழுவதும் நேற்று திடீர் மின் தடை ஏற்பட்டது. காலை 7.34 மணியளவில் தேசிய மின் பகிர்மான கட்டமைப்பில் மின்விநியோகத்தில் ஏற்ற இறக்கம் (Frequency Variation) ஏற்பட்டது. இதனால், ஒட்டுமொத்த மின்பகிர்மான அமைப்பும் தோல்வியடைந்தது. இதனால், நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
மின் விநியோகத்தை மீண்டும் கொண்டுவர அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தீவிர முயற்சிக்கு பின் நாட்டின் சில பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகம் சீரடைந்து வருகிறது. ஆனாலும் பல பகுதிகளில் இன்னும் மின் விநியோகம் சீரடையவில்லை
நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் இன்று நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இது தொடர்பாக ஷெரிப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நேற்று ஏற்பட்ட முன் தடையால் நாட்டு மக்கள் சந்தித்த பிரச்சினைகளுக்காக எனது அரசின் சார்பாக நான் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எனது உத்தரவின் பெயரில் மின் தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.