எடியூரப்பா இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்
கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை மாநில அரசு தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதல் வேண்டி டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.
முதல் மந்திரி எடியூரப்பா, இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதற்கு மு.க.ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு பதில் கடிதம் எழுதி, மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று கோரினார். இரு மாநிலங்களும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
இந்த பிரச்சினையில் இரு மாநிலங்களின் நலன்களைக் காக்கும் வகையில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தபோது கூறினார். அதே நேரத்தில் மேகதாது திட்ட விஷயத்தில் கர்நாடகத்திற்கு உதவிகள் செய்யப்படும் என்றும் அவர் எடியூரப்பாவிடம் உறுதியளித்தார்.
இதற்கிடையே, தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி தலைவர்கள் அடங்கிய குழு நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றது. அங்கு ஜல்சக்தித்துறை மத்திய மந்திரியை நேரில் சந்தித்து அந்தக் குழு முறையிட உள்ளது.