மருத்துவமனையில் இருந்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் திரும்பினார்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெருங்குடல் பிரச்சினை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த 4-ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் அது குறைந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவர் மருத்துவமனையிலேயே தினசரி பிரார்த்தனை மற்றும் ஞாயிறு வழிபாட்டை நடத்தினார்.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்குப் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று வாடிகன் திரும்பினார். கெமல்லி மருத்துவமனையில் இருந்து தனது சொகுசு காரில் புறப்பட்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் செல்வதற்கு முன்பாக ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா மாகியோர் பேராலயத்துக்கு சென்று வழிபாடு நடத்தினார்.