பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள கோஹிஸ்தான் மாவட்டத்தில் மிகப்பெரிய அணை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த அணையை கட்ட பாகிஸ்தானுக்கு சீனா உதவி வருகிறது. அதன்படி சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் ஏராளமானோர் பாகிஸ்தானில் தங்கியிருந்து அணை கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை சீன பொறியாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து அணைக்கட்டும் பகுதிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காக பஸ்சில் 2 துணை ராணுவ வீரர்கள் இருந்தனர்.
இந்த பஸ் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததா? அல்லது பஸ்சுக்குள் வெடிகுண்டு இருந்ததா? என்பது உடனடியாக தெரியவில்லை. எனினும் குண்டுவெடிப்பை தொடர்ந்து பஸ் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.
இந்த கொடூர தாக்குதலில் சீன பொறியாளர்கள் 9 பேர் மற்றும் 2 துணை ராணுவ வீரர்கள் உள்பட மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 30-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்தனர்.