முதல் 25 நாள்களில் 129 வீதி விபத்தக்கள் பதிவு - பொலிஸ் ஊடகப்பிரிவு
2025 ஜனவரி 1 முதல் 25ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கை 129 என்றும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 24 நாட்களில் 26 வீதி விபத்துகள் குறைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் குறித்த காலகட்டத்தில் விபத்துக்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 155 என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வீதி ஒழுங்கைப் பேணுவதற்கும் விபத்துகளைக் குறைப்பதற்கும் பொலிஸார் கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி விசேட போக்குவரத்து நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பு, நாளாந்தம் வீதி விபத்துக்களினால் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு மற்றும் ஏனைய விபத்துக்கள் பற்றிய தகவல்கள் வந்ததாகவும், அதன்படி, ஒரே விபத்தில் நான்கு அல்லது ஐந்து பேர் இறந்த சம்பவங்களும் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, குற்றம் மற்றும் போதைப்பொருட்களை ஒடுக்குவதற்கான விடேச நடவடிக்கையும் கடந்த 12 ஆம் திகதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 13 நாட்களில், 277,572 தனிப்பட்ட சோதனைகளும் 104,844 வாகன சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
குற்றங்களுக்கு நேரடியாக பங்களித்து சட்டத்திலிருந்து தப்பித்துவந்த 249 நபர்கள் மற்றும் 4,020 பிடியாணை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 3 மாதங்களில், துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் தொடர்புடைய 84 சந்தேக நபர்கள், ஒழுங்கமைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட T56 துப்பாக்கிகள் மூன்றும், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் குற்றங்களுக்குப் பின்னால் உள்ள முக்கிய குற்றவாளிகள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருவதாகவும், அவர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 3 மாதங்களில், இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
000