
விடுவிக்கப்படாத வலிவடக்கு காணிகள் தொடர்பில் ஊடக சந்திப்பு செய்ய முயன்றவர்களுக்கு அச்சுறுத்தல்
காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது .
ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முரண்பாட்டில் ஈடுபட்டார்.
தாம் எமது காணிகள் விடுவிப்பை வலியுறுத்தி ஊடக சந்திப்பை நடாத்தவே தாம் வந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் தேசிய அடையாள அட்டையை வாங்கி பெயர்களை பதிவு செய்த பொலிஸார் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தவர்களை காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர்.
இவற்றை காணொளியை எடுத்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் காணொளி எடுத்தனர்.
ஊடகவியலாளர் சந்திப்பை முடித்து விரைவாக செல்லுமாறு அங்கு வந்திருந்தவர்களுடன் பொலிஸார் தொடர்ச்சியாக தர்க்கத்தில் ஈடுபட்டனர்