இணைய நிதி மோசடி - 15 நாட்களுக்குள 218 வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது
இணையவழி நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 15 நாட்களுக்குள் மாத்திரம் 218 வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இணையவழி நிதி மோசடி தொடர்பான கைதுகள் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில், சிலாபம் இரணவில பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிசாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சீன பிரஜைகள் தவிர்ந்து, மலேசியர்கள், எத்தியோப்பியர்கள், கென்ய நாட்டவர்களும் அடங்குவதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தங்கியிருந்த விடுதிக்குக் கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் மாதாந்தம் 19 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் 2 இலங்கையர்களும் தொடர்புபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட கணினிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் மேலதிக சோதனைக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம் சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், இணையவழி நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பான சட்ட அமுலாக்கத்திற்கு தமது ஆதரவை வழங்குவதாகச் சீன தூதரகம் அறிவித்துள்ளது.
இதனிடையே, மியான்மார் மற்றும் தாய்லாந்தில் இயங்கும் சைபர் குற்ற முகாம்கள் போன்று, இலங்கையிலும் நிதி மோசடிகள் இடம்பெறுவதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாகச் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
000