5000 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் - தொடரும் அசௌகரியம் என இலங்கை தாதியர் சங்கம் தெரிவிப்பு
தாதியர் பற்றாக்குறை, அதிக வேலைப்பளு மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக சுமார் 5000 தாதியர்கள் முறையான அறியப்படுத்தல்கள் எதுவுமின்றி சேவையிலிருந்து விலகல், உரிய காலத்திற்கு முன்னர் ஓய்வு பெறுதல் அல்லது சேவையிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, தாதியர் பற்றாக்குறை மற்றும் அதிக அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ரவிந்திர கஹதவஆரச்சி தெரிவித்தார்.
அண்மையில் சுமார் 5000 தாதியர்கள் உரிய காலத்தில் ஓய்வெடுக்கவுள்ளனர். இந்நிலையில், தாதியொருவர் மூவரது பணியை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் தாங்க முடியாத அதிக வேலை அழுத்தத்தால் தாதியர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
2021ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் 2,528 தாதியர்கள் சேவையை விட்டு செல்லுதல், உரிய காலத்திற்கு முன்னர் ஓய்வு பெறுதல் மற்றும் நாட்டை விட்டு வெளியேறிய கவலைக்குரிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
2019-2020 ஆண்டுகளில் உயர்தரம் சித்திபெற்ற 3000 பேரை தாதியர் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள அப்போதைய அரசாங்கம் தீரமானித்தாலும் கூட அவர்களில் 2183 பேர் மாத்திரமே அதற்கு தகுதி பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
000