உக்ரைன் போர் - ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000 வீரர்களை அனுப்பியது வடகொரியா
உக்ரைனுக்கு எதிரான போரில் உதவுவதற்காக வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு மேற்கத்திய தூதர் தெரிவித்துள்ளார்.
இது மொஸ்கோவிற்கும் பியோங்யாங்கிற்கும் இடையே ஆழமடைந்து வரும் இராணுவ உறவை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எந்த வகையான வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர், அவர்களின் பங்கு என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று மேற்கத்திய இராஜதந்திரி Kyiv Independent இடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் தரப்பில் இருந்து இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
“ரஷ்யாவும், வட கொரியாவும் இராணுவ உறவுகளை ஆழப்படுத்துவது, உக்ரேனில் போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு மொஸ்கோவின் வளங்களின் தேவை அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
"கடந்த 2.5 ஆண்டுகளில் ரஷ்யாவும் அதன் இராணுவமும் வட கொரியாவிடம் கடன் வாங்கவும், ஆதரவை வாங்கவும் வேண்டியுள்ளது என்பது தெளிவான குறிகாட்டியாகும்" என்று இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்பு இணைப்பாளரான ஜோன் ஃபோர்மேன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பியாங்யாங்கிற்குச் சென்றபோது இரு நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இவ்வாறான பின்னணியில் வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீதான படையெடுப்பை ஆதரிக்கும் ரஷ்யாவின் திட்டங்களில் வடகொரியாவின் ஈடுபாடு உள்ளடங்கும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அண்மையில் கூறியிருந்தார்.
ரஷ்யாவும் வட கொரியாவும் தங்கள் கூட்டணியை ஆழப்படுத்தி வருவதாகவும், வட கொரியா ஆயுதங்களுடன் உக்ரைனின் முன் வரிசைகளுக்கு பணியாளர்களை அனுப்பும் அளவிற்கு கூட்டாண்மை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் வடகொரிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் சமீபத்திய நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.