மும்பை பயங்கரவாத தாக்குதல் - தொழில் அதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளிப்பு
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடிய தொழில் அதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறி வைத்துத் தாக்குதலை நடத்தினர். அதில் 166 பேர் கொல்லப்பட்டதுடன், 300 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு 2012 ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகப் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கனடாவைச் சேர்ந்த தஹாவூர் ராணா இந்தியாவினால் தேடப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவில் கைதானார்.
இந்தநிலையில் அவரை தமது நாட்டுக்கு அழைத்துச்சென்று விசாரிப்பதற்கு அமெரிக்காவிடம் இந்தியா கோரியிருந்தது.
அமெரிக்காவிலும் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
000