பதவியை இராஜினாமா செய்தார் நடிகை குஷ்பு
நடிகையும் ,அரசியல்வாதியுமான குஷ்பு, தான் வகித்து வந்த தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில் குஷ்புவின் இராஜினாமாக் கடிதத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு காலகட்டத்தில் குஷ்பு, தி.மு.கவில் இணைந்து பணியாற்றினார். இதனையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும் குஷ்புவிற்கு பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.