வயநாடு மண்சரிவு - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 6 இலட்சம் இழப்பீடு
கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 6 இலட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கடந்த 30ஆம் திகதி பெய்த கன மழையின் காரணமாக வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் பயங்கரமான மண்சரிவு ஏற்பட்டு 420 பேர் உயிரிழந்ததுடன் 200க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்க ரூபாய் 2000 கோடி நிதியுதவியளிக்க வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நேற்று புதன்கிழமை, முதலமைச்சர் விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 4 இலட்சமும் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 இலட்சம் என மொத்தமாக ரூபாய் 6 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
காயமடைந்ததில் 60 சதவீதத்துக்கும் மேல் இயலாமை ஏற்பட்டவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம், 40 முதல் 60 சதவீதம் வரையில் இயலாமை ஏற்பட்டவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம், வீடுகளை இழந்தவர்களுக்கு மாதம் ரூபாய் 6000 என வழங்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்