வயநாட்டை போலவே நீலகிரியில் நிலச்சரிவு? தீயாக பரவும் தகவல்
வயநாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாட்டைப் போலவே மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரியிலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இதற்கிடையே இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாகத் தீவிர மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த 2 வாரங்களாகத் தீவிர மழை கொட்டி வந்த நிலையில், இப்போது தான் கொஞ்சம் மழை விட்டுள்ளது.
இந்த கனமழையால் அங்கே பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதைச் சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
நீலகிரியில் கனமழை தொடரும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், மேலும், தேசிய பேரிடர் பாதுகாப்புப் படையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியில் முகாமிட்டுள்ளனர். தேசியப் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு உபகரணங்களை ஆட்சியர் லட்சுமி பவ்யா இன்று நேரில் பார்வையிட்டார்.
வதந்தி:
வயநாட்டைப் போல நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது முழுக்க முழுக்க வதந்தி என்ற மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, சமூக வலைத்தளங்களில் இதுபோல பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.