அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு - என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இரண்டு வார காலம் சட்டப்படி வேலை தொழிற்சங்கப் போராட்டத்தை அறிவித்துள்ளன. எவ்வாறெனினும், இந்தப் போராட்டமானது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை பாதிக்காது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை 100 வீதம் வழங்குவதாக சீன அரசாங்கம் அமைச்சுக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்களை பிரதேச களஞ்சியங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
பிரதான மற்றும் தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதன் மூலம் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 16000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000