ஆட்சியர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனாவின் மோசமான பிடியில் 10 மாநிலங்கள் சிக்கி உள்ளன. அவை மராட்டியம், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகம், தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் ராஜஸ்தான் ஆகும். இந்த மாநிலங்கள்தான் தினசரி பாதிப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன.
நேற்றும் இவை 72 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. கொரோனாவால் நேற்று பலியானோர் எண்ணிக்கையிலும் 10 மாநிலங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள 100 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி பேச முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 18ம் தேதியும், 20ம் தேதியும் 2 கட்டங்களாக பிரதமர் மோடி இந்த கலந்துரையாடலை நடத்துகிறார்.
நாடு கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில் இதுபோன்று மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி பேசப்போவது இதுவே முதல் முறை ஆகும். முதல் கட்டமாக 18ம் தேதியன்று, 9 மாநிலங்களின் 46 மாவட்ட கலெக்டர்களுடனும், 2வது கட்டமாக 20ம் தேதியன்று 54 மாவட்ட ஆட்சியர்களுடனும் மோடி பேசுகிறார். இது காணொலி காட்சி வழியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.