
பிளவுகளைக் கைவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்
தேசிய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவ எதிர்க்கட்சி கட்சிகளின் தலைவர்கள் நேற்று (14ஆம் திகதி புதன்கிழமை) ஒரு உடன்பாட்டை எட்டினர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, அதிகாரத்தை நிறுவவுள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பெயர் பட்டியலை தயாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இன்று (15ஆம் திகதி வியாழக்கிழமை) கூடி முடிவெடுக்கவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஐக்கிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனுர பிரியதர்ஷன யாப்பா, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டுக் கூட்டங்களை ஒன்றிணைக்கும் பணி முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, ஆளும் கட்சிக்கு எதிரான அனைத்து குழுக்களுடனும் கலந்துரையாடல்கள் மூலம் அதிகாரத்தை நிறுவுவதோடு கூடுதலாக இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000