இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் - ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3 ஆவது முறையாகவும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று (04) வெளியிடப்படவுள்ளன. இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவுகள் கடந்த 6 வாரங்களில், 7 கட்டங்களாக இடம்பெற்றன.
இதற்கமைய உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகின.
தற்போதைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியே 3 ஆவது முறையாகவும் அரசாங்கத்தை அமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தமாகவுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மீதமாகவுள்ள 542 தொகுதிகளுக்கான முடிவுகள் இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளன.
இதனடிப்படையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 219 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 86,777 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதேபோல, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2,48,992 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலியிலும் 1,87,508 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
தருமபுரி தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார். விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலையில் உள்ளார்.
மத்திய சென்னை தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலையில் உள்ளார். தருமபுரி தொகுதியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் நீடிக்கிறார், தி.மு.க வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
ஆந்திராவில் உள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 130 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 19 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 19 இடங்களிலும், பா.ஜ.க 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஒடிஷாவில் பா.ஜ.க 72 இடங்களிலும், பி.ஜே.டி 57 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இங்கு இரண்டு இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
ஏழு கட்டங்களாக நடந்த இந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதல் கட்டத்திலேயே தேர்தலைச் சந்தித்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஏப்ரல் திகதி வாக்குப் பதிவு நடந்தது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலத்திலேயே குறைவாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன.
அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து தேர்தலைச் சந்தித்தன. இவை தவிர, நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது
00