இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்து - பாரிய எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ஈரான்
இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில், நாசவேலை குறித்த சந்தேகம் நிராகரிக்கப்படுவதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி கடந்த 19ஆம் திகதி அஜர்பைஜான் நாட்டில் நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு நாடு திரும்பும் போது ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.
குறித்த விபத்தின் மூலம் ஹெலிகொப்டரில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. எனினும், இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.
ஈரானின் வடமேற்கில் உள்ள மலைப்பபகுதிகளில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மோசமான வானிலை காரணமாக ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியதாகவும் ஹெலிகொப்டர் மீது தாக்குதல்கள் நடத்தபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் விபத்து குறித்த முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆயுதப்படை அதிகாரிகள் குழுவின் இரண்டாவது அறிக்கையும் வெளியாகியிருந்தது.
அந்த அறிக்கையில், விபத்து நடந்த இடத்தில் ஹெலிகொப்டரின் பாகங்கள் சிதறிக் கிடந்த விதம் மற்றும் மீட்கப்பட்ட ஹெலிகொப்டர் பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை ஆகியவற்றின் அடிப்படையில், நாசவேலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் நிராகரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், ஈரானில் அடுத்த மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பதிவு செய்து கொள்வதற்கு ஐந்து நாள் காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஈரானில் மாற்றுத்தலைமை ஒன்று உருவாக வேண்டும் என ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் எதிர்வரும் தேர்தல் ஈரானில் கடினமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசியின் கொள்கைகளுடன் ஒத்துப்போக கூடிய ஒருவரை ஈரான் எதிர்ப்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது
000