ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ் கொடுக்கிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த நிதியாண்டின் லாபம் கடந்த நிதியாண்டின் லாபத்தை விட 24 சதவீதம் அதிகரித்து ரூ.16,521 கோடியாக எட்டியதையடுத்து, தங்களது ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸாக வழங்க முடிவெடுத்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு கடந்த ஆண்டில் 6.65 மாத சம்பளத்தை போனஸாக வழங்கிய நிலையில், தற்போது 8 மாத சம்பளத்தை போனஸாக அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 2023-2024 நிதியாண்டில் 1.98 பில்லியன் டாலர் நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதுவே, மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்த நிதியாண்டில், விமான நிறுவனத்தின் வருவாய் 24 சதவீதம் அதிகரித்து 2.7 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.
“கொரோனா தொற்று நோய்க்கு பிறகு, சீனா, ஹாங்காங், ஜப்பான் மற்றும் தைவான் ஆகியவை தங்களது எல்லைகளை முழுமையாக திறந்த பிறகு, வட ஆசியாவின் மீள் எழுச்சியால் விமானப் பயணத்திற்கான தேவை மிதமாக இருந்தது.” என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அதன் வருவாய் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன், வருவாய் 7 சதவீதம் அதிகரித்து 19 பில்லியன் டாலர்களை எட்டியது. அதே நேரத்தில் பயணிகள் வருவாய் 17.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்கூட்டுடன் இணைந்து கடந்த ஆண்டில் 36.4 மில்லியன் பயணிகளுக்கு சேவை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சேவை அளித்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மட்டும் தனது ஊழியர்களுக்கு சிறப்பான போனஸ் வழங்கும் நிறுவனம் அல்ல. துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்தை போனஸ் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.