அமெரிக்க தொழிலாளர்களையும் வர்த்தகங்களையும் பாதுகாக்கவென சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க அமெரிக்கா நடவடிக்கை
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இலத்திரனியல் வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கு அதிகரித்த வரியை விதிப்பதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க தொழிலாளர்களையும் வர்த்தகங்களையும் பாதுகாக்கவென ஜனாதிபதி பைடன் தமது வர்த்தகப் பிரதிநிதிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கு அமைய சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இலத்திரனியல் வாகனங்கள், சூரிய சக்தி கலங்கள், பட்டரிகள் உள்ளிட்ட 18 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு அதிகரித்த வரிகள் விதிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப பரிமாற்றம், புலமைத்துவ சொத்துக்கள் மற்றும் புத்தாக்கங்களில் அமெரிக்காவின் வர்த்தகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சீன வர்த்தக நடவடிக்கைகள் சவாலாக அமைந்துள்ளன.
குறிப்பாக சீனாவின் செயற்கையான குறைந்த விலை ஏற்றுமதிகள் உலகளாவிய சந்தைகளை பெரிதும் ஆக்கிரமித்துள்ளது. இவ்விதமான வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் அதன் விளைவான பாதிப்புகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையிலும் அமெரிக்க வர்த்தக சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000