சென்னையில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவுக்கு கூடுதல் விமான சேவை தொடக்கம்
சென்னையில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவுக்கு கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம் சர்வதேச முனையத்தில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவின் தமாம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதனால், பயணிகளின் வசதிக்காக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கும், பாங்காக்கில் இருந்து சென்னைக்கும் இரண்டு விமான சேவைகளை கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
இந்த விமான சேவைகள் வாரத்தில் நான்கு நாட்கள் வழங்கப்படுகின்றன.அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் தமாமிற்கும், தாமாமில் இருந்து சென்னைக்கும் இடையே இரண்டு விமான சேவைகளை, வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த விமான சேவைகள் வாரத்தில் இரண்டு நாட்கள் வழங்கப்படவுள்ளன. இதேபோல் சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலம் துர்காப்பூருக்கும், துர்காப்பூரிலிருந்து சென்னைக்கும் புதிதாக நேரடி விமான சேவை கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இந்த சேவையானது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் வழங்கப்படுகிறது.