தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை: வைகோ கண்டனம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய மத்திய அரசு தடைசெய்துள்ள நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக புலிகள் இயக்கம் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அநீதியான செயலாகும்.
இலங்கையில் நடைபெற்றுவந்த போர், 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பிறகும், விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்கான ஆதரவு மற்றும் நிதித்திரட்டல் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது’ என்று தடை நீட்டிப்பு ஆணையில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது’.
இராஜீவ்காந்தி கொலையை சுட்டிக்காட்டித்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். ஒரு சிலர் மறைந்துவிட்டார்கள்.
உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்கு புலனாய்வுக் குழு 20 ஆண்டுகாலமாக எவரையும் கைது செய்யாமல் காலம் கடத்தி இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தவறான நோக்கத்தோடு உண்மைக்கு மாறாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும். இந்திய அரசின் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.