பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் / பீகாரில் அமித் ஷா பேச்சு
பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் இன்று பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமித் ஷா, "காங்கிரஸ் போல வாக்கு வங்கியைக் கண்டு பாஜக பயப்படுவதில்லை. பிரதமர் மோடி அயோத்தியில் ராம் லல்லா கோயிலைக் கட்டியுள்ளார். இப்போது சீதா தேவி பிறந்த இடத்தில் ஒரு பெரிய கோவில் கட்டுவதுதான் மிச்சம் உள்ளது" என்று தெரிவித்தார்.
"ராமர் கோவில் திறப்பு விழாவில் கூட பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தவர்களால் இதைச் செய்ய முடியாது. சீதையின் வாழ்க்கையைப் போல் யாரேனும் ஒரு கோவிலை கட்ட முடியும் என்றால் அது நரேந்திர மோடி மட்டும் தான், அது பாஜக தான்." என்று பேசியுள்ளார் அமித் ஷா.
மேலும் பேசிய அமித் ஷா, "இன்று லாலு பிரசாத் யாதவ், அதிகார அரசியலுக்காக, தன் மகனை முதல்வராக்க, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.
மதுபானி பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "மதுபானி பகுதியில் பசு வதை வழக்குகள் அதிக அளவில் பதிவாகி உள்ளன. மதுபானி அன்னை சீதையின் பூமி. இந்த பகுதியில் பசு வதையை ஏற்க முடியாது. பாஜக அரசு பசு வதை அல்லது பசு கடத்தலை ஒருபோதும் அனுமதிக்காது.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராகப் பதவியேற்றவுடன், பசுக்களை வெட்டுபவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவார்கள் என்பது மோடியின் உத்தரவாதம்" என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் அமித் ஷா.