வேலூரில் இன்று 109 டிகிரி - வெயில் கொளுத்தியெடுத்தது
தமிழ்நாட்டில் இன்று 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், இன்று வேலூர், கரூர் பரமத்தியில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம், திருச்சி, திருத்தணியில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை நகரம், தருமபுரியில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது.
இந்த சூழலில், சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (20.04.2024) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.04.2024 முதல் 23.04.2024 வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 3°-5° டிகிரிசெல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை (20.04.2024) அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். அதற்கு அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
19.04.2024 முதல் 23.04.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 ஆகவும் மற்றும் கடலோர பகுதிகளில் 50-85%ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.