தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது தெலுங்கு தேசம் கட்சி
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மக்களவை தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.
மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மக்களவை தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. கடந்த 2 நாட்களாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுடன் சந்திப்பு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.