தாய்மார்களுக்கு நல்லது செய்வதே எனக்கு முக்கியம் - சஜித் பிரேமதாச
”நாட்டில் கூட்டங்களை நடத்தி பெண்களின் உரிமைகளை காக்க வேண்டும் என்று தம்பட்டம் அடிக்காமல் பிரயோக ரீதியில் நடைமுறையில் அதனை செயற்படுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட மூச்சு வேலைத்திட்டத்தின் கீழ், கொழும்பு காசல் வீதி மகப்பேற்று வைத்தியசாலைக்கு 46 இலட்சம் ரூபா பெறுமதியான சுகாதார உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்பில் மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கப்படுகிறது, ஆனால் அதில் சுகாதாரம், கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான உரிமைகள் குறிப்பிடப்படவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் கீழ் சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை என்பன சேர்க்கப்படும். பெயருக்கு இலவச சுகாதார சேவை இருந்தால் மட்டும் போதாது. அது தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும். விமசர்னங்களை முன்வைக்கும் உயர் வர்க்கத்தினர் எந்தக் குறையும் இல்லாது, ஆடம்பரமான சுகாதார முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
எல்லா இடங்களிலும் கூட்டங்களை நடத்தி, பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என கூறுவதாக இருந்தால், முதலில் இலவச சுகாதார சேவை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் பெண்கள், தாய்மார்கள், குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இரண்டு இலட்சம் வாக்குகளை விடவும் இரண்டு இலட்சம் தாய்மார்களுக்கு நல்லது செய்வது எனக்கு முக்கியம். பேருந்துகளில் பெண்களை அழைத்து வந்து கூட்டம் நடத்தும் தேவை எமக்கு இல்லை வங்குரோத்தான நாட்டில், இந்தப் பணத்தைப் பயன்படுத்தி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, பெண்களை திரட்டி, பெண் உரிமைகள் தொடர்பான உரைகளை எம்மாலும் நடத்தமுடியும்.
சர்வதேச பெண்கள் தினத்தில் ஒரு நாளில் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் உயிரைக் காக்கும் இயந்திரங்களை நன்கொடையாக வழங்க முடிந்தமை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.