உயர் நீதிமன்றம் மாணவர்களின் கல்வியுடன் விளையாடக்கூடாது என கல்வி அமைச்சர் தெரிவித்தார்
ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கி ஒருவருடமாகும் நிலையில் இன்னும் தீர்ப்பு இல்லை. அதனால் நீதிமன்றம் இந்த நாட்டின் 43 இலட்சம் மாணவர்களுடனே விளையாடிக்கொண்டிருக்கிறது.
அதனால் இன்னும் சிறிது காலம் பொருத்திருந்து பாராளுமன்றம் ஊடாக இதற்கு எதிராக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.மாத்தளை தம்புள்ளை தேர்தல் தொகுதியில் உள்ள தேவஹுவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு 38 வருடங்களாக கணித ஆசிரியர் ஒருவர் இல்லை. அவ்வாறே புத்தல கோனகங்ஆர கனிஷ்ட வித்தியாலயத்திற்கு தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் எவரும் இல்லை. பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அண்மையில் மேற்குறிப்பிட்ட குறித்த பாடசாலைகளுக்குச் சென்ற போதே இவை அனைத்தும் அம்பலமானது.எமது நாட்டில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 22 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆற்றிய சேவையினைப் பாராட்டி, முறையான வழிமுறையில் அவர்களை ஆசிரியர் துறையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.