மின்சார கட்டணம் 35 சதவீதத்தால் குறைக்கப்படுவதே நியாயமானது : ஜனக ரத்நாயக்க
கடந்த 2022ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் பொதுமக்கள் நலன்கருதி என்னால் முன்வைக்கப்பட்ட மின்கட்டணம் தொடர்பான பரிந்துரை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அமுல்படுத்தப்படுவதென்பது என்னுடைய தியாகத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கின்றேன். எனினும் இலங்கை மின்சாரசபை பெற்றுக்கொண்டுள்ள இலாபத்தை பொதுமக்களுக்கு உரியவாறு பகிர்ந்தளிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்துவதாயின் மின் கட்டணம் 35 வீதத்தால் குறைக்கப்படுவதே ஆரோக்கியமானது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் (4) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீத மின்கட்டண குறைப்புக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் நேற்று கொழும்பிலுள்ள அவரது பிரத்தியேக அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.