என்னை காப்பாதுங்க.. உதவிக்கேட்ட காசா சிறுமி! ஓடி வருவதற்குள் சிதறி பலியான கொடூரம்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உதவிக்கேட்ட சிறுமி மீட்கப்படுவதற்குள் இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையே கடந்த ஆண்டு முதலாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. ஹமாஸ் படையினரின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட காசா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் அப்பாவி பாலஸ்தீன மக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கும் இஸ்ரேல் செவிசாய்க்காத நிலையில், குறிப்பிட்ட சில இடங்களில் போரை தற்காலிகமாக நிறுத்தினால் மக்களுக்கு சிகிச்சையளித்து காப்பாற்ற முடியும் என செஞ்சிலுவை சங்கம் இஸ்ரேலிடம் பேசி வருகிறது.
இதற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருந்தாலும் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் போரில் நிலைகுலைந்துள்ள காசாவில் ஹிந்த் ரஜாப் என்ற ஆறு வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் சிறுமியின் குடும்பத்தினர் பலரும் உயிரிழந்த நிலையில் காயங்களுடன் உயிர் பிழைத்த சிறுமி, மொபைல் வழியே செஞ்சிலுவை சங்கத்தினரை தொடர்பு கொண்டு தன்னை காப்பாற்றும்படி அழுதுள்ளார்.
உடனடியாக சிறுமியை மீட்க அங்கு செஞ்சிலுவை சங்கத்தினர் சென்றுள்ளனர். இருவர் காரில் இருந்த சிறுமியை மீட்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது இஸ்ரேல் படையினர் வீசிய வெடிக்குண்டில் அந்த ஆறு வயது சிறுமியும், மீட்க சென்ற இரு செஞ்சிலுவை சங்கத்தினரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதை பாலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.