கார்களை கிஃப்ட் செய்த ஐடி நிறுவனம் - இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்த ஊழியர்கள்
தஞ்சாவூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் பணியாளர்களை உற்சாகப்படுத்த 11 சொகுசு கார்களை பரிசாகக் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்.
தொழிலாளர்களை ஊக்குவிக்கவும் பணிகளுக்கு நிறுவனத்துடன் நெருக்கமான பிணைப்பு உண்டாகவும் தொழிலாளர்களுக்கு பெரிய பரிசுகளை வழங்குவது அவ்வப்போது செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது தஞ்சை மாவட்டத்தில் அதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஹம்சவர்தன் 2014ஆம் ஆண்டு பிபிஎஸ் என்ற மென் பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். நான்கு பேருடன் ஆரம்பித்த நிறுவனம் இப்போது 400 பணியாளர்கள் கொண்ட நிறுவனமாக வளர்ந்துவிட்டது. இந்நிலையில் தனது ஊழியர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் பரிசு ஒன்றை வழங்க ஹம்சவர்தன் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, ஊழியர்களை அவர்களின் குடும்பத்தினருடன் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்திருக்கிறார். சிறப்பாகப் பணிபுரியும் 11 பேருக்கும் ஒரு சொகுசுக் காரை சர்ப்ரைஸ் கிஃப்டாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
இந்தத் திடீர் பரிசு கிடைத்ததால் நெகிழ்ச்சி அடைந்த ஊழியர்கள் 11 பேரும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஹம்சவர்தனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்தப் பரிசு 11 பேரில் 5 பெண் ஊழியர்களும் 6 ஆண் ஊழியர்களும் அடங்குவர்.
வரும் ஆண்டுகளிலும் சிறப்பாக வேலை செய்து நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பணியாளர்களுக்கு கார்களைப் பரிசளிக்க இருப்பதாகவும் ஹம்சவர்தன் கூறியிருக்கிறார். இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தின் டெல்டா பகுதியைச் சேர்ந்த 10,000 இளைஞர்களுக்குத் தனது நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கொடுப்பதுதான் தனது லட்சியம் என்றும் ஹம்சவர்தன் தெரிவித்துள்ளார்.
இவரைப் போல முதலாளி எல்லோருக்கும் கிடைப்பாரா?