தமிழ் மக்கள் தலைவர்கள் சிங்களவரை அண்டிப் பிழைத்தல் தான் சரி என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர் : விக்னேஸ்வரன்
சில தமிழ் மக்கள் தலைவர்கள் சிங்களவரை அண்டிப் பிழைத்தல் தான் சரி என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மாதாந்த கேள்வி பதிலிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார்.
சிங்களமொழி பேசுவோர் தமது மொழியைத் திணித்து தமிழ்ப் பேசும் மக்களை அழிக்கவும் தமிழ் மொழி பேசுவோர் நிலங்களைச் சூறையாடவுந் தொடங்கிய போதுதான் தமிழ்த் தேசியம் எம் மக்களிடையே பெரும் வலுவுடன் வெளிவந்தது. சில தமிழ் மக்கட் தலைவர்கள் சிங்களவரை அண்டிப் பிழைத்தல் தான் சரி என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொள்வதில்லை. இது ஒரு சிங்கள நாடு. அதில் தமிழராகிய நாம் சிங்களவரிடம் இருந்து பறிக்கக் கூடியதைப் பறிப்போம் என்ற சிந்தனையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தமிழ்த் தேசியத்தை மறுப்பவர்கள். தமிழ் தேசத்தையும் அதன் வழிவந்த தமிழ் தேசியத்தையும் ஏற்பவர்கள்தான் தமிழ்த் தேசியவாதிகள் என தெரிவித்தார்.