புதிய கூட்டணியில் இணைவதற்கு 28 கட்சிகள், 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் பேச்சுவார்த்தை : நிமல் லான்சா
புதிய கூட்டணியில் இணைவதற்காக 28க்கும் மேற்பட்ட கட்சிகளும், 60க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜனநாயக ரீதியான அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்கும் வேலைத்திட்டத்தை எமது கூட்டணி முன்னெடுக்கும் என, புதிய கூட்டணியின் ஸ்தாபகரான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
புதிய கூட்டணியை கட்டியெழுப்பும் நோக்கில் சனிக்கிழமை (27) ஜா-எல நகரில் நடைபெற்ற முதலாவது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிமல் லான்சா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை முழுவதிலும் உள்ள பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள், ஏனைய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் எம்முடன் இணைந்து கொள்ளவுள்ளனர். இது ஒரு ஒத்திகை மாத்திரமே. அனைத்துக் கட்சிகளுடனும், அனைத்து எம்.பி.க்களுடனும் பேசி, துணைத் திட்டத்தை தயாரித்துள்ளோம். எனவே, அச்சமின்றி ஒன்றுபடுங்கள், பொய்யர்களும், தற்பெருமையாளரர்களாலும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
இந்த புதிய கூட்டணிக்காக 28 இற்கும் மேற்பட்ட கட்சிகளும், 60 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கையில் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கி, அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் கொண்ட ஒவ்வொரு ஆசனத்திலும் மக்களை அணி திரளச் செய்து, ஜனநாயக ரீதியான ஒரு அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்க முடியும்.
கோட்டாபாய ராஜபக்சவை அழைத்து வருமாறு சமூக வலைத்தளங்களில் பெரும் அலை எழுப்பப்படுகிறது. நாம் அப்பணிக்கு செல்லவில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட சமூக ஊடக அலைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் வாய் வீச்சாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றார்.