ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் முதலீடு
இந்திய செல்வந்தாரான முகேஷ் அம்பானி தனது நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மூலம் தொலைத்தொடர்பு வணிகத்தில் தனது எல்லைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்திய நிதி நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்போதைய அதிகாரிகள் பல துறைகளை தனியார்மயமாக்குவதற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால், சிறிலங்கா அரசாங்கம் பண நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியுடன் போராடி வருகிறது.
சிறிலங்கா அரசாங்கம் நவம்பர் 10 ஆம் திகதிக்குள் ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சிக்கான சாத்தியமான ஏலதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்திருந்தது. மேலும் முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்த மூன்று நிறுவனங்களில் ஒன்றாகும் என்று மணிகன்ட்ரோல் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் ஜனவரி 12 அன்று ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் ஜியோ பிளாட்ஃபார்ம்களை தங்கள் அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சாத்தியமான ஏலதாரர்களில் ஒன்றாக பெயரிட்டது. ஜியோவைத் தவிர, கோர்ட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் மற்றும் பெட்டிகோ கொமர்சியோ இன்டர்நேஷனல் எல்.டி.ஏ ஆகியவை போட்டியில் உள்ள மற்ற இரண்டு நிறுவனங்களாகும்.
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கான விசேட வழிகாட்டல்களின் பிரகாரம் நிறுவனத்தின் முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்படும் என அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.