CTB பஸ்களுக்கு புதிய கியூஆர் கட்டண முறை
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் இலத்திரனியல் அட்டை அல்லது கியூஆர் கட்டண முறையை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பயணச்சீட்டுகளுக்கு பணம் செலுத்துவதற்கு இலத்திரனியல் அட்டை அல்லது கியூஆர் கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு செயற்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று வியாழக்கிழமை (11) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) பணம் செலுத்தும் முறை புதிய இணையத்தளத்தில் செயற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதிகள் அல்லது நடத்துனர்களால் நாளாந்த மொத்த வருமானம் அந்தந்த பஸ் டிப்போக்களுக்கு திருப்பி கொடுக்கப்படுவதில்லை. இதனால் ஒரு டிப்போவிற்கு ஒரு நாளைக்கு சுமார் 100,000 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
எனவே, இலத்திரனியல் அட்டை அல்லது கியூஆர் குறியீட்டு முறைமையுடன் கூடிய பணம் செலுத்தும் முறை இன்னும் இரண்டு மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.