தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலத்தின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி : சரத் வீரசேகர
தேசிய ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை ஸ்தாபித்ததன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் அதனையும் செய்ய வேண்டும்.ஆகவே நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழு ஊடாக இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்ட முடியும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ அதிகாரிகள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலத்தில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு உருவாக்கப்பட்ட அரச கொள்கைகளை செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் இந்த அலுவலகத்தின் ஊடாக அதனையும் செயற்படுத்த வேண்டும். 29 ஆயிரம் இராணுவத்தினர் இதற்காகவே உயிர் நீத்தார்கள்.தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் சூழ்ச்சி நிறைந்தது. எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற தேசிய ஒற்றுமைக்கும்,நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.