பல நிறுவனங்கள் விரைவில் மீண்டும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் - மனுஷ நாணயக்கார
இலங்கையின் வங்குரோத்து நிலை காரணமாக முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள விரும்பாத பல நிறுவனங்கள் விரைவில் மீண்டும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும். இதனால் வீழ்ச்சியடைந்துள்ள கட்டுமானத் துறை எதிர்வரும் சில மாதங்களில் புத்தெழுச்சி பெறும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கைவிடப்பட்டிருந்த ஜப்பான் இலகு ரயில் சேவைத்திட்டம், இடை நிறுத்தப்பட்டிருந்த விமான நிலைய கட்டிட வேலைத்திட்டம் முதலானவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியும் கிடைக்கும் . கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபட்டுள்ளோர் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில் கௌவரத்துடன் தமது தொழிலை அமைப்பு ரீதியில் மேம்படுத்திக்கொண்டால், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் தொழிலாளர்களை உங்களது அங்கீகாரமின்றி அனுமதிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலில் பத்தாயிரம் தொழில்வாய்ப்புகளுக்கு மேலதிகமாக கட்டுமானத்துறையில் புதிதாக 20 ஆயிரம் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கவிருப்பதாகவும் ,இது தொடர்பான பேச்சுவார்த்தை இஸ்ரேலுடன் நடத்தப்பட்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.