இலங்கையில் AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டது : ஜனாதிபதி
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டதாகவும் இது நாட்டின் வரலாற்றில் ஒதுக்கப்பட்ட கூடுதல் தொகை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஒரு நாடாக முன்னோக்கிச் செல்வதில் விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சித் துறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டில் டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான நிறுவன கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விஞ்ஞான துறையினூடாக இலங்கைக்கு அளப்பரிய சேவையாற்றிய பேராசிரியர் ஸ்டென்லி விஜேசுந்தரவின் நினைவு தின விழாவை முன்னிட்டு நேற்று (10) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், சிறந்த அறிஞரான ஸ்டென்லி விஜேசுந்தரவின் கொலையுடன் இந்த நாட்டில் உயர்கல்வி மற்றும் விஞ்ஞானத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கக்கூடிய மனித வளத்தை நாடு இழந்துள்ளது என்றும் தெரிவித்தார்.