இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நான் : ஜனக ரத்நாயக்க
இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரத்நாயக்க, அண்மையில் வர்த்தமானி மூலம் தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவித்ததாக தெரிவித்தார்.
“இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் என்னிடம் உள்ளன. கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்,'' என்றார்.
அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடை தொடர்பில் கருத்து தெரிவித்த ரத்நாயக்க, அவ்வாறான மின்வெட்டை தடுப்பதற்கான பரிந்துரைகளுடன் 2022 ஆம் ஆண்டு PUCSL தலைவர் என்ற வகையில் தான், வர்த்தமானி வெளியிட்டதாக தெரிவித்தார். எவ்வாறாயினும், அமைச்சர் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிந்துரைகளை அமல்படுத்தத் தவறியுள்ளதாகவும், இதன் காரணமாக அண்மையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட 5 மணித்தியாலங்களுக்குள் கூட அரசாங்கத்தினால் மின்சாரத்தை மீளமைக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து அவருக்கு எதிராக பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து இந்த ஆண்டு பாராளுமன்ற வாக்கெடுப்பில் ஜனக்க ரத்நாயக்க PUCSL தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.