இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே எனது நோக்கம் : ஜனாதிபதி
இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு பேணுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டு இலங்கையின் கிரிக்கட் எங்கு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை தமக்கு இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனால்தான் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபாவை பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கியதாகவும், எதிர்காலத்தில் அதனை வருடாந்தம் 02 பில்லியன் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிதி நிர்வாகத்தையும், பாடசாலை கிரிக்கெட்டின் அபிவிருத்தியையும் சுயாதீன நிதியம் ஒன்றிடம் ஒப்படைக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சகல செயற்பாடுகளையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்து எதிர்பார்த்த இலக்குகளை அடைவதே அதன் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் மூலம் இடைக்கால குழுக்கள் மற்றும் அமைச்சரின் அதிகாரங்கள் நீக்கப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில், விளையாட்டானது வணிகமயமாக்கப்படும் என்றால் அது அரசியலில் இருந்து விடுபட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
நாட்டில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் சுபீட்சமான நாடாக மாறுவதற்கான திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், கிரிக்கெட் போன்ற ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் நாடாக இலங்கை மீண்டும் மாற வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற கொழும்பு கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.