செந்தில்குமரன் போன்ற அறக்கொடையாளர்கள், எம் மண்ணுக்குக் கிடைத்த மாபெரும் பேறு - சிறீதரன் எம்.பி.
செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் ஸ்தாபகரும், புலம்பெயர்ந்து கனேடிய மண்ணில் வசித்தாலும் எமது மக்களின் உணர்வுகளோடு ஒன்றித்திருக்கும் உயர் கொடையாளருமான திருவாளர் செந்தில்குமரன் போன்ற அறக்கொடையாளர்கள் எமது மண்ணுக்குக் கிடைத்த மாபெரும் பேறாகப் போற்றப்பட வேண்டியவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.கனடா செந்தில்மரன் நிவாரண நிதியத்தினால், முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இடருறும் நோயாளர்களின் நன்மை கருதி, மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு, சுமார் ஒரு கோடி 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகமும் வழங்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது;இலங்கையின் மாவட்ட எல்லைகளைக் கடந்து, கல்வி, மருத்துவம், அபிவிருத்தி என்ற அடிப்படையில் பல்வேறு பொது நலனோம்புகைத் திட்டங்களையும், பொருளாதார ரீதியாக இடர்படும் குடும்பங்களுக்கான பல்வேறு உதவித்திட்டங்களையும், கொரோனாப் பெருந்தொற்றின் போதான உலருணவு உதவிகளையும் உரியமுறையில் மேற்கொண்டுவரும் செந்தில்குமரன் அவர்களின் அறப்பணிகளின் அதியுச்ச பயன்விளைவாக, மருத்துவம் சார்ந்த இந்த மகத்தான பணியும் அமைந்துள்ளது என்றார்.