46 ஆவது நாளாக இலவங்குடா கடற்பகுதியில் பாராம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு இடையுறாக அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றக் கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி கிராஞ்சி இலவங்குடா கடற்பகுதியில் பாராம்பரிய தொழில் நடவடிக்கைகளுக்கு இடையுறாக அமைக்கப்பட்டுள்ள அட்டைப் பண்ணைகளை அகற்றக் கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் இன்று 46 ஆவது நாளாகவும் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட இலவங்குடா கடற்பரப்பில் தங்களுடைய பாரம்பரிய தொழில்களை மேற்கொள்வதற்கு இடையூறாக அமைக்கப்பட்டிருக்கின்ற அட்டைப் பண்ணைகளை அகற்றி தாம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வழி வகைகளை செய்து தருமாறு கோரி கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் இரண்டு நாள் உண்ணாவிரதப் போரட்டத்தை முன்னெடுத்த கடற்தொழிலாளர்கள் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைகளையடுத்து கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுத்தனர்.இன்று 46 வது நாளாகவும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பல்வேறு இடங்களிலும் இது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவித்திருந்த நிலையில் அவற்றை ஒரு வார காலத்துக்குள் அகற்றித் தருவதாக தெரிவித்திருந்த போதும் இதுவரை அட்டைப்பண்ணைகளை அகற்றித் தரவில்லை என்றும் அட்டைப் பண்ணைகளை அகற்றி தமது தொழில் நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்து தரும் வரை தொடர்ந்தும் தாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.