நாளை ஜனாதிபதி தேர்தல்- திரவுபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப்பதவிக்கான தேர்தல் நாளை (18-ம் தேதி) நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சியின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. பாராளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநில சட்டமன்ற செயலக வளாகத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் (மக்களவை, மேல்சபை), எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க உள்ளனர். அதே நேரத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள் ஓட்டு போட முடியாது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளம் சிவப்பு நிறத்திலும் வாக்கு சீட்டு வழங்கப்படும். தேர்தல் அதிகாரி பிரிப்பதற்கு வசதியாக இரு நிறத்தில் வாக்கு சீட்டு அளிக்கப்படுகிறது. வாக்கு மதிப்பு அடிப்படையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் மதிப்பிடப்படும். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு இந்த முறை 700 ஆக உள்ளது. எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208 ஆக உள்ளது. அதை தொடர்ந்து தமிழ்நாடு, ஜார்க்கண்டில் எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 ஆகவும், மகாராஷ்டிரத்தில் 175 ஆகவும் உள்ளன. சிக்கிமில் 7 ஆகவும், நாகலாந்தில் 9 ஆகவும் ஓட்டு மதிப்பு உள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பாராளுமன்றத்தில் வருகிற 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.