இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த மோடி
இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில், 'பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' என்று எழுதியிருந்தார்.
இளையராஜாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்த இளையராஜா, தான் மோடி குறித்து அனைத்தையும் படித்து அறிந்தபின் தான் அவ்வாறு எழுதியதாகவும், தனது கருத்தை வாபஸ் பெற முடியாது என்றும் கூறியிருந்தார்.
இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்து தெரிவித்தனர். தன்னை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பாராட்டிய இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி, தன்னை பற்றிய நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக நன்றி என்று கூறியுள்ளார்.