விருதுகளை அள்ளிக் குவித்த அசுரன்
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி திரைக்கு வந்த படம் அசுரன். தனுஷ் இருவேறு கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்திருந்தார். இதில், தனுஷிற்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார். மேலும், பசுபதி, கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், சுப்பிரமணியம் சிவா, சென்றாயன், நிதிஷ் வீரா, அம்மு அபிராமி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
திரையரங்கு மூலமாக மட்டுமே அசுரன் படம் ரூ.100 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்தது.
இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான Behindwoods Gold Medal, Zee Cine Awards Tamil, Ananda Vikatan Cinema Awards, Norway Tamil Film Festival Awards ஆகிய விருதுகள் வெற்றிமாறனுக்கு கிடைத்தது. இதே போன்று தனுஷிற்கும் சிறந்த நடிகருக்கான விருதுகள் கிடைத்தது. இப்படி பல விருதுகளை அள்ளிக் கொடுத்த அசுரன் ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்டது. ஆம், கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
இதில், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம் மற்றும் சிறந்த கலை இயக்குனர் ஆகிய பிரிவுகளில் அசுரன் படத்திற்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடந்த, 67ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் தனுஷின் அசுரன் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருதும், தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது.