பூநகரி மண்ணானது மனித சுவாத்தியத்திற்கு சிறந்த மண்ணாக இருக்கின்ற போதும் இங்கு தண்ணீர் ஒரு பிரச்சனை
பெரும் கற்காலப்பண்பாட்டுக் காலம் தொடக்கம் மக்கள் வாழ்ந்து வருவதாக தொல்லியச்சான்றுதலுடன் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்ற மிகவும் தொன்மையானஒரு பிரதேசமாக பூநகரிப்பிரதேசம் காணப்படுகின்றது.பண்டைய காலத்தில் பூநகரியின் கரையோரப்பகுதிகளில் வர்த்தக தொடர்புடன் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.இதைவிட, கரையோரம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் விவசாயத்தோடு பின்னிப்பிணைந்த மக்கள் சமுகமும் அங்கு வாழ்ந்ததாக வரலாறுகள் மூலம் அறியமுடிகின்றது.
அதேபோல விவசாயத்திலும் முதன்மையான பிரதேசமாக பூநகரிப்பிரதேசம் காணப்படுகின்றது.இன்றும் பாரம்பரிய நெல்லினங்கள் பூநகரி பிரதேசத்தின் விளைவிக்கப்படுகின்றன.
பாரம்பரிய நெல்லினங்களின் அரிசிக்கு இலங்கையில் மட்டுமல்ல ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும் குறையாத மதிப்புக்காணப்படுகின்றது.
இந்த நெல்லினங்கள் மற்றும் விவசாய நடவடிககைகள் நீர்ப்பாசன கட்டமைப்புக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பயிர்ச்செய்கைள் அல்ல, மாறாக மழையை நம்பி வானம் பார்த்த பூமியாக (மானாவாரியாக) மேற்கொள்ளப்படுகின்ற ஒரு பயிர்ச்செய்கையின் மூலமுமே இந்த விவசாய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.கடந்த காலங்களில் நிலவிய தொடர்யுத்தம் இடப்பெயர்வுகள் என்பவற்றால் பூநகரி கரையோரப்பிரதேசங்களில் காணப்பட்ட உவர்நீர்த்தடுப்பணைகள் மற்றும் சிறிய நீர்நிலைகள் சிறுகுளங்கள் சேதமடைந்ததன் விளைவாக, கடல் நீர் உட்புகுந்து இப்பிரதேசத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.
இந்த பூநகரிப்பிரதேசத்தில் நீரிப்பாசன கட்டமைப்பின் மூலம் ஒரு பாரிய நீரத்தேக்கம் ஒன்றினை அமைக்கலாம் என்று கடந்த 2012ம் ஆண்டின் ஆரம்பத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீரப்பாசனத்திணைக்களத்தினால் பிள்ளையார் சுழிபோட்டப்பட்டாலும் அது எப்போது நிறைவேற்றப்படும் என்பது இந்த மக்களின் கேள்வியாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தை கடந்து செல்கின்ற மற்றும் அதிக நீர்வரத்தைக்கொண்ட கனகராயன்ஆறு போன்ற பாரிய ஆறுகள் மறிக்கப்பட்டு கிளிநொச்சியின் கிழக்குப்பிரதேசத்தில் இரணைமடுக்குளம் கல்மடுக்குளம் மற்றும் பிரமந்தனாறுக்குளம் கனகாம்பிகைக்குளம், போன்ற பாரிய குளங்கள் அமைந்துள்ளன.இதேபோல கிளிநொச்சியின் மேற்குப்பிரதேசத்தில் உள்ள பாரிய நீப்பாசனக்குளமாக அக்கராயன்குளமும் அதற்கு அடுத்தாற்போல் குடமுருட்டிக்குளம் கரியாலை நாகபடுவான்குளம் வன்னேரிக்குளம்; போன்ற குளங்கள் அமைந்துள்ளன.
இந்தக்குளங்களுக்கு ஒப்பான பாரிய நீர்த்தேக்கம் ஒன்றினை கிளிநொச்சியின் பூநகரிப்பிரதேசத்தில் அமைக்கலாம் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டு இது தொடர்பான ஆய்வுகள் நீர்ப்பாசனத்திணைகளத்தின் ஊடாக கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்;கப்பட்டன.
அதாவது, பூநகரிப்பிரதேசத்திற்குட்பட்ட மாழாப்புக்குளம், கொக்குடையான் குளம், புத்தியற்ற மோட்டை வெள்ளப்பள்ளம் முறியவிழுந்தான், கொக்குடையான், கல்லாய்குளம், களுவெளி உள்ளிட்ட சுமார் பத்திற்கும் மேற்பட்டசிறுசிறு குளங்களை உள்ளடக்கி இக்குளத்தினை அமைக்கலாம் என்றும் ஏற்கனவே திட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
இலங்கையில் சுமார்; 103 இற்கும் மேற்பட்ட ஆற்றுப்படுக்கைகள் காணப்பட்டன.இதில் கனகராயன் ஆறு, மண்டைக்கல்லாறு , அக்கராயன் ஆறு, உள்ளிட்ட ஏழு ஆறுகள் கிளிநொச்சி மாவட்டத்தின் கரையோரங்களில் சங்கமிக்கின்றன.அக்கராயன் ஆற்றுக்கும் மண்டைக்கல்லாற்றிக்கும் இடைப்பட்ட பகுதியில் இக்குளம் அமைவதனால் இவ்விரு ஆறுகளின் ஊடாக வருகின்ற நீர் மற்றும் இக்குளத்தின் மேற் பகுதிகளில் உள்ள பிரதேசங்களில் இருந்து வருகின்ற நீர் என்பவற்றால் இக்குளத்தின் நீர்வரத்து அதிகமாக இருக்கும். இதன் மூலம் பூநகரியில் உள்ள கிட்டத்தட்ட மூவாயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் இருபோகங்களில்; பயிர்செய்கை மேற்கொள்ளமுடியும் இருப்பினும் அதிகளவான நீரேந்துப்பிரதேசமாகவும் அமையும்; எனவும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கிளிநெர்சசி மாவட்டத்தில் இருக்கின்ற இரணைமடுக்குளம், கல்மடுக்குளம், அக்கராயன்குளம், என்பவற்றை புனரமைப்பது அல்லது குளத்தின் அணைக்கட்டுக்களை உயர்த்தி நீர்க்கொள்ளவை அதிகரித்தல், என்பதற்கு அப்பால் இவ்வாறு புதிய குளம் ஒன்றை அமைப்பது என்பது மிகக்கடினமாகும்.அந்தஅடிப்படையில் இந்தக்குளம் அமைய வேண்டும் என்ற ஆசையும் அவாவும் பூநகரிப்பிரதேச விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இருக்கின்றது என்பதை அவர்களினது கருத்துக்களிலிருந்து அறியமுடிகின்றது.அதாவது பூநகரியில் இக்குளம் அமையுமானால் இங்குள்ள வளங்கள் சிறப்படையும் இன்று உவர் நீரக்கிணறுகளாக இருக்கின்ற கிணறுகள் நன்னீராக மாற்றடையும். நல்ல மண் வளம் இருக்கின்றபோதும்.நீர் வளம் இல்லாமையினால் இரண்டு போகம் பயிர் செய்யமுடியாது.
கால் நடைகளுக்கு தண்ணீர் இல்லை சிலவேளை மழையை நம்பி செய்யும் விவசாயமும் மழைபொய்த்தால் அழிந்து விடும்; தற்போது எமது பிரதேசத்தில் குடிநீர் பாரிய பிரச்சனை, முட்கொம்பனில் இருந்தும் கிளிநொச்சியில் இருந்தும் தான் எமக்கு குடிநீர் வருகின்றது.பூநகரி மண்ணானது மனித சுவாத்தியத்திற்கு சிறந்த மண்ணாக இருக்கின்ற போது இங்கு தண்ணீர் ஒரு பிரச்சனையாக அமைந்துள்ளது.இந்தக்குளம் அமையப்பெறுமானால் பூநகரியின் தலைவிதியே மாற்றம் பெறும் என விவசாயிகள் தெரிவிததுள்ளனர்.வரலாற்றுததொன்மையும் பூர்வீகச்சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்ட பூநகரிப்பிரதேசத்தின் வளத்தை பெருக்கும்வகையில் இக்குளம் அமையபபெறவேண்டும் என்பது எல்லோரினதும் எதிர் பார்ப்பாகும்.சுப்பிரமணியம் பாஸ்கரன்