பொதுச்செயலாளரும் நான் தான்; கட்சியும் எனக்கு தான் – சசிகலா
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன உடனே ஜெயலலிதா காரில் அதிமுக கொடியுடன் வலம் வந்து சசிகலா தனது அரசியல் காயை நகர்த்த தொடங்கினார். சசிகலா கர்நாடகா எல்லை வரை ஒரு காரில் வந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் அதிமுக நிர்வாகியின் காரில் அதிமுக கொடியுடன் பயணித்து தனது சமார்த்தியத்தை காட்டினார். அந்த நிர்வாகியைக் கட்சியை விட்டு தூக்கி விட்டார்கள் என்பது வேறு கதை.
சசிகலா, எடப்பாடிக்கு கூற விழைவது ஒன்றே ஒன்று தான். “பொதுச்செயலாளரும் நான் தான்; கட்சியும் எனக்கு தான்” என்பதே அது. இதையொட்டியே அவரின் இன்றைய பேட்டியும் அமைந்தது. அவர் 1.5 கோடி தொண்டர்கள் என்று சொன்னது அதிமுக தொண்டர்களைத் தான். ஒன்றிணைய வாருங்கள் என்று கூறியது எடப்பாடியைத் தான்.
இன்று சசிகலா விட்ட அறிக்கையின் பின்னால் அண்ணா படம் பொறித்த அதிமுக கொடி. நடுவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்ஙணம் ‘கழக பொதுச்செயலாளர்’ என்று முடிவுரை எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுகவைக் கைப்பற்றப் போகும் முடிவில் தான் உறுதியாக இருப்பதை எடப்பாடிக்குக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.